ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். ஜவுளி நிறுவனத்தில் கூலி வேலை செய்துவந்த இவர் தனது சொந்த தேவைக்காக திலிப்குமார் என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்தில் ரூ.30 ஆயிரத்தை திருப்பி செலுத்திய நிலையில், கடந்த சில மாதங்களாகவே மீதமுள்ள பத்தாயிரம் ரூபாயை செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், திலிப்குமார் வட்டியுடன் சேர்த்து ரூ.40 ஆயிரம் பணத்தை செலுத்துமாறு ஸ்ரீதரிடம் கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரீதர் இரு தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனிக்காத நிலையில், நேற்று (மே 1) மாலை உயிரிழந்தார்.