ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அனைத்து வகை சிகிச்சைப் பிரிவுகளையும் கொண்டுள்ளதுடன், 24 மணி நேர சிகிச்சை மையமாகவும் விளங்கிவருகிறது. ஈரோட்டின் மையப்பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளதால் இந்த மருத்துவமனைக்கு ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வந்து சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது.
இந்த மருத்துவமனையில் விபத்து கால அவசர சிகிச்சைப் பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, தீக்காயங்களுக்கு தனிப்பிரிவு, பெண்கள் பிரசவம், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு, கண் உள்ளிட்ட அனைத்து வகை நோய்களுக்கான தனிபிரிவுகளும், தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க தனி வார்டுகள், சித்த மருத்துவத்திற்கு தனி மருத்துவமனை என அனைத்து வகை நோய்களுக்கும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்துடன் சிறப்பு ஸ்கேன் வசதியும் கொண்டுள்ள மருத்துவமனையாக இருப்பதால் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல், மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை உடனிருந்து கவனித்து வரும் நோயாளிகளின் குடும்பத்தினர், புறநோயாளிகளின் உடன் வருபவர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்தது.