ஈரோடு மாவட்டம் பெருந்துறை உழவன் நகரைச் சேர்ந்தவர் மீசைக்காரர் என்ற சுப்பிரமணி(80). இவர் சென்னிமலை ரோடு, கொங்கு பள்ளி பின்புறமுள்ள பெருந்துறை தீயணைப்பு நிலைய வளாகத்தினுள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிக்கு பந்தல் மற்றும் டேபிள் சேர் வாடகைக்கு விடும் கல்யாண ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையை சுற்றிலும் தகரமும், மேல் பகுதியானது கூரையும் வைத்து அமைக்கப்பட்டுள்ளது. கடைக்குள் இரண்டு லட்சம் மதிப்பிலான மூங்கில், பந்தல் கீற்றுகள் உள்ளிட்ட பொருள்களும், மூன்று லட்சம் மதிப்பிலான டேபிள் சேர் உள்ளிட்ட பொருள்களும் இருந்துள்ளன. இந்நிலையில், நேற்று (ஜூலை 10) இரவு சுப்பிரமணி கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
அப்போது கடையின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும் இது குறித்து பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் பரவ தொடங்கியதால், சென்னிமலை மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
இதையும் படிங்க:சேலையூரில் மின்சாரம் பாய்ந்து இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு!