ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணையின் மூலமாக கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்பிரச்னை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளைத் தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276ஐ ரத்து செய்ய வேண்டும் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானப் பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசன விவசாயிகள் பெருந்துறை அருகே உள்ள கீழ்பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் பழுதடைந்த பழைய கட்டுமானத்தை மட்டுமே சீரமைக்க வேண்டும், மண் கரை மண் கரையாகவே இருக்க வேண்டும், அரசணை 276ஐ ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், பணிகள் தொடங்கப்பட்ட இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்தை கேட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.