இன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைத் தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதி சார்ந்த பிரச்னைகள் முன்வைத்து தேவைகளை கோரிக்கைகளாக முன்வைத்தனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய காளிங்கராயன் கால்வாய் பாசன சங்கத்தின் தலைவர் வேலாயுதம், “ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நெல் கொள்முதல் மையங்கள் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்றனர்.
குறிப்பாக காலிங்கராயன் கால்வாய் பாசன பகுதியிலுள்ள கணபதிபாளையம் நெல் கொள்முதல் மையத்தில் வெளிமாநில வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகப் பலமுறை புகார்கள் அளித்தும் பலனில்லை.
மேலும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை எடை போடுவதற்கு காலதாமதம் செய்வதோடு, விவசாயிகள் கொண்டுசெல்லும் நெல் மூட்டைகள் உள்ளிட்ட பயிர் மூட்டைகளை எடை போடுவதற்கு ஒரு மூட்டைக்கு 35 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை கையூட்டாகப் பெற்றுக்கொண்டு எடை போடுகின்றனர். ஊழியர்கள் கேட்கும் தொகையைத் தராத விவசாயிகளின் விளைபொருள்கள் அடங்கிய மூட்டைகள் எடை போடாமல் தவிர்க்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.