கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூரு அடுத்த தேவன்காந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, கோவை, ஈரோடு, நாமக்கல் உள்பட ஏழு மாவட்டங்களில் 300 கி.மீ. தூரம் வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
எண்ணெய் குழாய்கள் விளைநிலங்கள் வழியாக பதிக்கப்பட்டு கொண்டுசென்றால், விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த அத்திக்காடு என்ற இடத்தில் பாரத் பெட்ரோலியம் எண்ணெய் குழாய்பதிக்கும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும், இத்திட்டத்தை சாலையோரமாகக் கொண்டு செல்ல வலியுறுத்தி, நடுகல்லை நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கெயில் கேஸ் திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்லப்படும் என 2013இல் சட்டப்பேரவையில் அறிவித்ததை போல் இத்திட்டத்தையும் சாலையோரமாக கொண்டு செல்ல முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.