வெளியேறிய அதிமுக வேட்பாளர் ஈரோடு: கடந்த 27ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தபால் வாக்கு எண்ணிக்கை முதலே காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தொகுதியில் மொத்தம் பதிவான 1 லட்சத்து 70 ஆயிரத்து 578 வாக்குகளும், 16 மேசைகளில் 15 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் 15வது மற்றும் இறுதிச்சுற்று முடிவில் தபால் வாக்குகளுடன் சேர்த்து மொத்தமாக எண்ணப்பட்ட வாக்குகளில் 1,10,156 வாக்குகளை பெற்று திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் அபார வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்று தோல்வி அடைந்தனர். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,433 வாக்குகள் பெற்று, 4ம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.
வெற்றி குறித்த அதிகாரப்பூர்வ சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. எனினும்,தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 15ஆவது மற்றும் இறுதிச்சுற்று நிலவரப்படி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
முன்னதாக, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு, அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு காத்திராமல் வெளியேறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது' என கூறிவிட்டுச் சென்றார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னதாகவே திமுக கூட்டணி கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டத்தை துவக்கி விட்டனர். திமுக தலைமையகமான அண்ணா சென்னை அறிவாலயத்தில் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இனிப்பு வழங்கியும், மேளம் அடித்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று காங்கிரஸ் தலைமையகமான சத்யமூர்த்திபவனிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை கவுரவ பிரச்சனையாகவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அணுகின. குறிப்பாக அதிமுகவில் ஒற்றைத் தலைமையை உச்சநீதிமன்றம் சென்று உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை களமிறக்கினார். தேர்தலில் பணம், பரிசுப்பொருள் பட்டுவாடா குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை