ஈரோடு:தமிழ்நாடே உற்றுநோக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலையில் 7:14 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் வாக்களித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மாற்றத்திற்காகப் பெருமகிழ்ச்சியுடன் மக்கள் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பணிகள் திருப்திகரமானதாக உள்ளது. எனது வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. மக்களின் ஆர்வத்தைப் பார்த்து அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது' என்று தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து வாக்களிப்பதற்குக் கட்சி வேட்டி துண்டுடன் வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்தை தேர்தல் அதிகாரிகள் மறுத்தனர். பின்னர், மாற்று உடையில் மீண்டும் வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எனது வாக்கைப் பதிவு செய்தேன். இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் ஜனநாயக கடைமையைச் செய்ய வேண்டும்' என்றார்.