ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிட வேண்டும் என்று முன்னர் மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சித்தோடு பேரூராட்சிக்குள்பட்ட நல்லாகவுண்டம்பாளையத்தில் 59 பேருக்கும், மொடக்குறிச்சி காகம் பகுதியில் 23 பேருக்கும் 2018 டிசம்பர் 21ஆம் தேதி விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டது.
பட்டாக்கள் வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் எவ்வித அளவீட்டுப் பணிகளும் நடைபெறவில்லை. இது குறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அளவீட்டுப் பணியை மேற்கொண்டு, சீரமைக்கப்பட்ட இடத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பட்டாக்களைப் பெற்ற பயனாளிகள் நல்லாகவுண்டம்பாளையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகள், பார்வை மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை அளவீட்டுப் பணியை மேற்கொள்ளாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்திற்குப் பிறகு தங்களுக்கான இடத்தை சீரமைக்காவிட்டால், தங்களுடைய வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகள் போன்றவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், தமிழ்நாடு அளவில் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் ஒருங்கிணைத்து வருகிற சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... இலவச வீட்டு மனைப் பட்டா, பசுமை வீடுகள் வழங்கக் கோரி திருநங்கைகள் மனு!