மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் தேர்வுசெய்யப்பட்ட ஈரோடு மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்கள், சாலை வசதிகள், வணிக வளாகக் கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுவருகின்றன.
அதேபோல் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை மறுசுழற்சிசெய்து உரங்களாக மாற்றும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு நடமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் இளங்கோ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "மத்திய அரசு சார்பில் 2017ஆம் ஆண்டு சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் தேர்வுசெய்யப்பட்ட பத்து மாநகராட்சியில் ஈரோடு மாநகராட்சியும் ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சியில் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்திய அளவில் சீர்மிகு நகரம் திட்டப்பணிகளை சிறப்பாகச் செயல்படுத்துவதில் சிறந்த மாநகராட்சியாக ஈரோடு தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன்னர் பரிசு வழங்கப்பட்டது.