ஈரோடு மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் நோய்த்தொற்று பாதிப்புகள் குறைந்ததற்குப் பிறகு, அறிவிக்கப்பட்ட தளர்வில் தனிக்கடைகள் திறப்புக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சிப் பகுதியில் அனுமதியளிக்கப்பட்ட கடைகளின் செயல்பாடு குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.
ஈஸ்வரன் கோவில் வீதிப் பகுதி உள்ளிட்டப் பகுதிகளில், அனுமதி வழங்கப்பட்ட கடைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டார். குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட கடைகளில், குளிர்சாதன வசதி இயக்கப்பட்டிருந்தால், அந்தக் கடைகளுக்குச் சீல் வைக்க உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், 'ஈரோடு மாவட்டத்தில் கடந்த 31 நாட்களாக நோய்த்தொற்று பாதிப்பில்லாததால், மாவட்டம் முழுவதும் 80 விழுக்காடு தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகிறது. 40 முதல் 50 விழுக்காடு தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன' எனத் தெரிவித்தார்.