ஈரோடு : புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் தினசரி 10 டன் குப்பை சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் வாரியாக பிரித்து திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பை மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் தேவையில்லை என வீசி எறியும் பொருள்களை பயன்படுத்தி கலைநயம் மிக்க பொருள்களை தயாரித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முடிவு செய்தனர்.
தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் அசத்தல்
அதன்படி, பொதுமக்கள் குப்பையில் வீசிய துணி வகைகள், அட்டை பெட்டிகள், மரச்சாமான்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மின்சார பல்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பூத்தொட்டி, கால்மிதி, வீட்டு துடைப்பான், மின்சார பல்பில் பென்குயின், தேங்காய் சிரட்டையில் அகப்பை ஆகியவற்றை தயாரித்து மக்களிடம் விழிப்புணர்வுக்காக காட்சிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை பிரித்து வழங்குவது எப்படி என செயல்விளக்க படம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மூலிகைச் செடிகள், பூச்செடிகள் ஆகியவற்றை தயாரித்தும், மர பெட்டிகளில் ஓவியம் வரைந்தும், நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வுக்காக காட்சிப் படுத்தியுள்ளனர்.
தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் அசத்தல் பொதுமக்கள் தேவையில்லை என தூக்கி எறியும் பொருள்களை பயன்படுத்தி கலைநயம் மிக்க உபயோகமான பொருள்களை தயாரித்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களை மக்கள் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!