ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந் தேதி வரை நடந்தது. பரிசீலனையில் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 6 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். கடந்த 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், சுயேட்சைகள் உள்ளிட்டோர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறக்கும் பிரசாரம் கடந்த 25ஆம் தேதி மாலையுடன் ஓய்ந்தது. அதன்பிறகு தொகுதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார், துணை ராணுவ வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்தனர்.
20 நாட்களுக்கும் மேலாக விழாக்கோலம் பூண்டு இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது. பரபரப்பாக காணப்பட்ட முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 12 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக சோதனை சாவடிகளிலும் போலீசார் விடிய, விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.