ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஜனைகோயில் வீதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவர் தனது மகன் சந்துருவை (6) திட்டியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு சந்துரு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாக சந்துரு வராததால் பேச்சியம்மாள் சுற்றியுள்ள பகுதிகளில் தேடினார்.
பின்னர், கோபி காவல் துறையினருக்கு பேச்சியம்மாள் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் கோபிசெட்டிபாளையம் நகர் பகுதியில் சிறுவனைத் தேடி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கோபி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் பின்புறம் சிறுவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்த சிலர், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல் துறையினர் சிறுவனை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், காணாமல்போன பேச்சியம்மாளின் மகன் சந்துரு என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல் துறையினர் பேச்சியம்மாளிடம் சிறுவனை ஒப்படைத்தனர். சிறுவனுக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் பலூன்கள் வாங்கிக்கொடுத்து சமாதானப்படுத்தினர்.
காணாமல்போன சிறுவனை ஒரு மணிநேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.