ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்தில் தாளவாடி, ஆசனூர், தலமலை, அருள்வாடி, பைணாப்புரம், பனக்கள்ளி என மொத்தம் ஆறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை கடன் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்தச் சங்கங்களில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தலமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட சில்வர் ஓக் ரக மரங்கள் பராமரிக்கப்பட்டுவந்தன. இந்த மரங்கள் அனைத்தும் நன்கு வளர்ந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் (02/02/2020) இரவு இந்த மரங்கள் அனைத்தும் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.
மரங்களை வெட்டும்போது ஏற்பட்ட மரத்துண்டுகள் அங்கேயே கிடக்கின்றன. கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் உதவியுடன் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் நேரில் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அரசு வளாகங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்ட வேண்டுமானால் தலமலை பாதுகாப்புக் குழு விதிகளின்படி அனுமதிபெற்று மரங்களை வெட்டு வேண்டும். ஆனால் எந்தவொரு முன்அனுமதியும் இன்றி இரவோடு இரவாக மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மரங்ளை வெட்ட வருவாய்த் துறை, வனத் துறையினரிடம் முறையான அனுமதியும் பெறவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.