ஈரோடு:ஈரோடு பிரப் சாலையில் ஆற்றல் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் 10 ரூபாய் உணவகம் நேற்று (மே 29) திறக்கப்பட்டது. முன்னதாக பள்ளி, தூய்மைப் பணியாளர்களுக்கு என பல்வேறு உதவிகளைச் செய்து வந்த ஆற்றல் பவுண்டேசன் தொண்டு நிறுவனம், அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் போதும் என்ற மனநிறைவுடன் சாப்பிடுவதற்காக ‘ஆற்றல் உணவகம்’ என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
காலை சிற்றுண்டி, மதியம் பொரியல் உடன் சாப்பாடு மற்றும் இரவு டிபன் என மூன்று வேளையும் செயல்படும் இந்த உணவகத்தில், அளவில்லாத உணவை உண்ண ஒரு வேளைக்கு 10 ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், உணவை வீணாக்கக் கூடாது என்ற நிபந்தனை உடன் வழங்கப்படும் உணவை ருசிக்க பல்வேறு தரப்பு மக்களும் வருகை தருகின்றனர்.
மேலும் இது குறித்து ஆற்றல் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அசோக் குமார் கூறுகையில், “இன்று திறக்கப்பட்டுள்ள ஆற்றல் உணவகத்தின் நோக்கம் என்பது, ஈரோடு வாழ் மக்களுக்குத் தரமான, அளவில்லாத உணவைக் கொடுக்க வேண்டும் என்ற முடிவின் கீழ் உருவானது.
பணம், பொருள் என்ற எதற்கும் இல்லாத சிறப்பு உணவிற்கு உண்டு. அதுதான் போதும் என்ற பண்பு. உணவை மட்டுமே நாம் போதும் என சொல்கிறோம். இந்த உணவகம் வாரத்தில் 7 நாட்களும், மாதத்தில் 30 நாட்களும் என அனைத்து நாட்களும் செயல்படும். அதிலும், காலை இட்லி, சட்டினி, சாம்பார் உடன் டிபன், மதியம் சாம்பார், பொரியல் உடன் சாப்பாடு, இரவில் இட்லி டிபன் ஆகியவை வழங்கப்படும். ஒரு வேளை உணவிற்கு 10 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.