ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன் பெண் கன்றுயானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் கன்றுயானையை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.
இந்நிலையில், கன்றுயானையை மற்ற யானைக்கூட்டம் சேர்க்காததால், அது வனப்பகுதியைவிட்டு வெளியேறி வனச்சாலையில் சுற்றித்திரிந்தது. இந்த யானையை வனத்துறையினர் திரும்ப மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு கால்நடை மருத்துவக்குழுவினர் கன்றுயானையை பரிசோதித்து தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் (புட்டி) பால் கொடுத்து பராமரித்து வந்தனர்.
பெண் கன்றுயாணை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுசென்று பராமரிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்தநிலையில், திடீரென கன்றுயானையை வாகனத்தில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டுசென்றுவிட்டனர். மேலும், இந்த நடவடிக்கையை இவர்கள் ரகசியமாக மேற்கொண்டதால், வன உயிரின ஆர்வலர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.