ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. பொதுவாக வனப்பகுதியிலுள்ள சாலைகளில் செல்லும் மக்கள் உணவுப் பொருள்களை வீசி செல்வதால் அதனை உண்ணும் யானைகள், சாலைகளில் நாள்தோறும் உணவுகளை எதிர்பார்த்து காத்துகிடக்கின்றன.
அந்த வகையில் கர்நாடகத்திலிருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரிகள், கரும்புத் துண்டுகளை சாலையில் வீசியெறிவதால் அதனை விரும்பி உண்ணும் காட்டு யானைகள், நாள்தோறும் லாரியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில், காராப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சாம்ராஜ்நகரிலிருந்து வந்த கரும்பு லாரியை தனது கன்றுடன் வழிமறித்த காட்டு யானை, லாரியைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தி, தும்பிக்கையால் கரும்பைப் பிடுங்கி தனது கன்றுக்கு கொடுத்தது. இதையடுத்து யானைக்கன்று கரும்பைத் தின்றபடி லாரி முன்பு நின்றுகொண்டிருந்தது.