ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனுார், தலமலை, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன.
கோடைகாலத்தை முன்னிட்டு, ஆசனுார், தாளவாடி பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு காணப்படுவதால், தண்ணீருக்காக யானைகள் ஆசனுார் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம்கூட்டமாக சாலையைக் கடக்கின்றன.
தண்ணீர் தேடி சாலையை கடக்கும் யானைகள் தமிழ்நாடு-கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் ஆசனுார் சாலை வழியாகச் செல்லும்போது, வாகனங்களை யானைகள் துரத்துகின்றன. மேலும், யானைகள் சாலையை கடக்கும்போது வாகனத்தை நிறுத்தி போட்டோ எடுப்பது, வேடிக்கை பார்ப்பது சட்டப்படி குற்றமென வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
யானைகள் சாலையோரம் நிற்பதால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் எனவும், பகல் நேரங்களில் மட்டுமே இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணிக்குமாறும் - அதுவும் மெதுவாகத்தான் கடக்க வேண்டும் எனவும் வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.