கோவை:ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தோம்.
ஆனால், இதுவரை எந்தப் பயனும் இல்லை. ஆளுங்கட்சியான திமுக, வாக்காளர்களை அழைத்துக் கொண்டு போய் சாப்பாடு போட்டு அவர்களை அடைத்து வைக்கிறார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பகிரங்கமாக தேர்தல் விதிமீறல்கள் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. பலமுறை தேர்தல் விதிமீறல் குறித்து நான் பேசியுள்ளேன். தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும்போதும் அது குறித்து பேசி இருக்கிறேன்.
நேரடியாக ஈரோடு இடைத்தேர்தல் குளறுபடிகள் குறித்து ஊடகங்கள் நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும். ஊடகத்தினருக்கு நேர்மையும் தர்மமும் இருக்கிறது. அதை மீறக் கூடாது. திறந்த வழியில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். வாக்காளர்கள் ஓட்டு போட்டு தான் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று முடிவு செய்யப்படும். ஸ்டாலின் ஓட்டு போடுவதில்லை. மக்கள் எந்த தீர்ப்பு கொடுப்பார்கள் என்று தேர்தல் முடிவுக்குப்பின் தான் தெரியவரும்'' எனத் தெரிவித்தார்.