ஈரோடு:சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் அலுவலராக இருந்த ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் நேற்று (மார்ச்.21) லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பெரியார் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் 9 மணி நேரம் நடந்த லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை நள்ளிரவு 1 மணி அளவில் முடிவுக்கு வந்தது.
ஈரோடு மாநகராட்சி அணையர் சிவக்குமார், சென்னை பல்லாவரம் ஆணையராக கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் பணியாற்றிய போது முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அடிப்படையில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 1 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஓழிப்புத் துறையினர் தெரிவித்தனர். ஆணையர் சிவக்குமாரிடம் கைப்பற்றபட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணைக்கு பின்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று லஞ்ச ஓழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆணையர் சிவக்குமார் கடந்த ஆட்சியின் போது, 2015- 2016 ஆம் ஆண்டில் பல்லாவரம் ஆணையராக இருந்ததால் அரசியல் காரணமாகவும் இந்த சோதனை நடைபெற்று இருக்கலாமோ? எனக் கூறப்படுகிறது.
இதேபோல், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் சோதனை நடைபெற்றது.
நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் வருவாய் ஆய்வாளர் ஆனந்தமூர்த்தியின் மனைவி ஆர்த்தி (வயது 41). இவர் கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் தருமபுரி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக பணியாற்றினார். தற்போது அவர் வேலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக உள்ளார்.
இந்நிலையில் திட்ட இயக்குநர் ஆர்த்தி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டியில் உள்ள தோட்டத்துடன் சேர்ந்த அவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.