ஈரோடு:பெருந்துறை அருகே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமல்லாமல் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை நிர்வாகம் முறையாக வெளியேற்றாமல், கழிவுகளை மருத்துவமனை அருகேவுள்ள வனப்பகுதியில் குழியைத் தோண்டி அதனைக் கொட்டி தீயிட்டு எரித்து வருகின்றது. இதன் காரணமாக மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசப்படுவதுடன் புகை மூட்டமாக காணப்பட்டு வருகிறது.
மேலும், மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் வீதம் டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மருத்துவக் கழிவுகளை மருத்துவ வளாகம் அருகே அமைந்துள்ள வனப்பகுதியில் குழியைத் தோண்டி கொட்டி ஏரித்து வருகின்றனர். இதனால், அங்குள்ள மயில்கள் மற்றும் மான்கள் பாதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் காற்றில் பரவும் மாசு காரணமாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட நிவாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். உடலில் உள்ள நோயை போக்க மருத்துவமனைக்கு வந்தால் கூடுதாக தான் பல நோய்கள் வருகிறது என பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இது போன்ற அலட்சிய போக்கை தடுக்க தமிழ்நாடு அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.