ஈரோடு:புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள பவானிசாகர் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தாசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடந்து சென்ற நல்லம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்தார். இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் பவானிசாகர் சாலையில் உடனடியாக இரண்டு வேகத்தடை அமைக்கக்கோரி, இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல் காரணமாக பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசை கட்டி நின்றன. தகவல் அறிந்து வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்துசெல்ல மறுத்தனர்.