கரோனா பொதுமுடக்கத்தால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால், அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்து மதுபானங்கள் தமிழ்நாட்டிற்கு கடத்தப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
கர்நாடக மாநில மதுபானங்கள் கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழ்நாடு-கர்நாடகா எல்லையிலுள்ள ஆசனூர் காவல் நிலையம் முன்பு சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
732 மதுபாட்டில்கள்
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியிலிருந்து காய்கறிகள் பாரம் ஏற்றிவந்த மினி லாரியை காவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, காய்கறி மூட்டைகளுக்கிடையே பெட்டி பெட்டியாக கர்நாடக மாநில மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது.
மதுபானங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் காய்கறி வாகனத்தை பறிமுதல்செய்து பார்த்தபோது, அதில் 750 மில்லி லிட்டர் அளவுள்ள 276 பாட்டில்களும், 375 மில்லி லிட்டர் அளவுள்ள 456 பாட்டில்களும், மொத்தம் 732 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மதுபானங்கள் மற்றும் காய்கறி வாகனத்தை பறிமுதல்செய்து, மினி லாரியை ஓட்டி வந்த பெங்களூரைச் சேர்ந்த ஓட்டுநர் உதய ரங்கநாத்தின் மீது வழக்குப்பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.