உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.
ஊரடங்கு அறிவித்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். இருந்தபோதிலும் பொதுமக்கள் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படாமல் வெளியிடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஓவியர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலைகளில் கரோனா குறித்த ஓவியங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஓவியர்கள் 30க்கும் மேற்பட்வர்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு ஓவியர் சங்கத்தின் சார்பில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம், மொடச்சூர் சிக்னல் ஆகிய பகுதிகளில் வைரஸ் ஓவியம் வரைந்து ‘விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு’ என்ற வாசகங்களை எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஓவியர்கள் வரைந்த கரோனா விழிப்புணர்வு ஓவியம் இந்த ஓவியங்களை கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல் துறையினர் பார்வையிட்டு, ஓவியர்களைப் பாராட்டினர். மேலும், கரோனா நோய் பரவல் தடுப்புப் பணிகளில் காவல் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன் இணைந்து ஓவியர்களும் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்