ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள காளி திம்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சேகரம், மானாவாரி போன்ற வனப்பொருள்களை பயிர்செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அடர்ந்த காட்டுப் பகுதியான இக்கிராமத்தில் காட்டு யானைகள், பன்றிகள், காட்டெருமை போன்ற போன்ற வன விலங்குகள் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், ராகி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்களை சேதமாக்கி வருகின்றன.
கல்வி பெற சிரமத்தை சந்திக்கும் மாணவர்கள்
இக்கிராமத்தில் வாழும் குழந்தைகள் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை பயில ஆசனூர், தாளவாடி, தலமலை ஆகிய அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில்தான் தங்கி படிக்க வேண்டும். தற்சமயம் கரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீடு திரும்பிய குழந்தைகள் படித்த படிப்பை மறந்து பெற்றோருடன் ஆடு, மாடு மேய்க்க வனத்திற்குள் சென்று வருகின்றனர். இதனால் பள்ளிகளில் பயின்ற இக்குழந்தைகள், கல்வியை மறக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
முனைவர் பட்டம் பெற்ற மாணவர்
இதே கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற இளைஞர், சிறு வயது முதல் அரசு தரும் பழங்குடியினர் சலுகைகளைக் கொண்டு பள்ளி, கல்லூரி எனப் படித்து இயற்பியலில் பிஎச்டி முடித்து முனைவராகியுள்ளார். சத்தியமூர்த்தி இதே கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான கவுசல்யா என்னும் பெண்ணை திருமணம் செய்து சொந்த கிராமத்திலேயே வசித்து வருகிறார்.