ஒற்றுமையில்லாத இந்தியா கூட்டணியில் மு.க.ஸ்டாலின் ஒற்றுமையை ஏற்படுத்துவார் - ஆ.ராசா எம்பி நம்பிக்கை ஈரோடு:ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி திமுக துணை பொதுச் செயலாளர் நீலகிரி எம்பி ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி ஆ.ராசா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய எம்பி ஆ.ராசா, "இன்றைக்கு இந்தியாவை ஆளும் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தை விட்டும், அரசியலை விட்டும் ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு சக்தி மிக்க தலைவர் நமது முதல்வர் மு.க ஸ்டாலின் தான். மு.க.ஸ்டாலினை எதிர்பார்த்து தான் வடநாட்டில் உள்ள தலைவர்கள் எல்லாம் காத்திருக்கிறார்கள்.
விரைவில், நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. பத்தாண்டு காலத்தில் மோடி ஆட்சியில் நாம் பட்டதெல்லாம் போதும் என மக்கள் புழுங்கி கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுகிறது. அப்படிப்பட்ட ஒற்றுமையை நமது தலைவராகிய மு.க.ஸ்டாலின் உருவாக்குவார்.
இன்னும் ஒருமாத காலத்தில், அந்த ஒற்றுமை வந்தப்பின், அமித்ஷாவும் மோடியும் இந்த நாட்டில் இருக்க மாட்டார்கள்" என்று அவர் பேசினார்.
இதையும் படிங்க:வேங்கைவயல் விவகாரம்; மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை செய்ய அனுமதி கோரிய மனு மீது முக்கிய உத்தரவு!