வருகிற 2021 சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் நேரில் சென்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரை நேரில் சந்தித்து அவர்களது முக்கிய பிரச்னைகள், இதுவரை நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து அவற்றை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தனர். சித்தோடு அருகேயுள்ள பெருமாள்மலைப் பகுதியில் தேர்தல் தயாரிப்பு குழுவின் முகாம் நடைபெற்றது. சந்திப்பின்போது கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், கட்சியின் மாநில மக்கள் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், திமுக கொள்கைப்பரப்பு செயலாளரும், மக்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.