ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பிற்பகல் 1 மணியிலிருந்து 1.30 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தன்னை குறிப்பிட்ட நேரத்தில் மனுதாக்கல் செய்ய அனுமதிக்காததால் காவல்துறையினருடன் கணேசமூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியரின் அறை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தை கைவிட்ட அவர் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கதிரவனிடம் கணேசமூர்த்தியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.