கரோனா பெருந்தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு தளர்வளித்திட வேண்டிய முக்கியத் தொழில்கள், தொழிற்சாலைகள் குறித்து மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக அறிக்கைகள் தாக்கல்செய்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்நாட்டுத் தொழிலாளர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன் ஆகியவை குறித்த உரிமையாளர்கள் அளிக்கும் தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடனும், உண்மையின் அடிப்படையில் இருப்பது நல்லது என்றும், உரிமையாளர்கள் அளித்திடும் தகவலைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் அளித்திடும் அறிக்கையின் அடிப்படையிலேயே தொழிற்சாலைகளுக்குத் தளர்வு வழங்கிட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், “தொழிற்சாலைகளில் பணியாற்றும் உள்ளூர் தொழிலாளர்கள், வெளிமாவட்ட, வெளிமாநிலத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள விவரம் ஆகியவை குறித்த விவரங்களைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தாக்கல்செய்திட வேண்டும்.