ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதிக்கு பவானி ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்துச் சுத்திகரிக்கப்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 24, 25ஆவது வார்டுகளில் உள்ள கோவிந்தராஜபுரம், மூணு வீடு, பரிசல் துறை வீதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரைப் பாத்திரங்களில் பிடித்தபோது அதில் புழுக்கள், குப்பைகளுடன் கலந்துவருவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் குறித்த நேரத்திற்கு அலுவலர்கள் வராமல் குடிநீரில் புழுக்கள் கலந்துவருவதைப் பார்க்காமல் அலட்சியமாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலைக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.