தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் பழங்கால பொருள்கள் கண்டுபிடிப்பு

ஈரோடு: கொடுமணல் பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சி பணிகளில் கல்மணிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருள்கள் கிடைத்துள்ளன.

Discovery of antiquities in kodumanal excavations
Discovery of antiquities in kodumanal excavations

By

Published : Mar 8, 2021, 5:56 PM IST

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ளது கொடுமணல் கிராமம். இங்குள்ள நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததுடன் அவர்கள் வணிகத்திலும், தொழில் துறையிலும் சிறந்து விளங்கியதற்கான சான்றுகளும் இருந்தன.

இதுகுறித்த அகழாய்வு பணிகள் 1981ஆம் ஆண்டு முதல் தஞ்சை பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் தீவிரமடைந்தன.

அதன்பிறகு, தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அதன் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையிலான குழுவினர் 8ஆவது அகழாய்வு பணியை 2020ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கினர். ஆறு மாதங்கள் நடைபெற்ற இந்த பணியில், செம்பு, வெள்ளி நாணயங்கள், கருவிகள், பிராமி எழுத்துக்கள், கலை பொருள்கள், ஈமச்சின்னம், மண் பானைகள், மனித எலும்புகள் என ஆயிரக்கணக்கான பொருள்களை கண்டுபிடித்தனர்.

தற்போது தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, தொல்லியல் துறையின் சார்பில் அதன் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் 9ஆவது அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தொல்லியல் பொறுப்பாளர் டாக்டர் கே.சுரேஷ், ஆய்வு மாணவர் பி.அருண்குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெறும் இந்த ஆய்வில் ஆரம்ப கட்டத்திலேயே பழங்கால பொருள்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் கூறுகையில், "கடந்த ஆண்டு நடைபெற்ற அகழாய்வில் தொழிற்கூடங்கள் இருந்த பகுதியில் தண்ணீர் வெளியேறும் வகையில் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கால்வாய் நொய்யல் ஆற்றுப்பகுதி வரை சென்று இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அப்போது ஆய்வு பணிக்கான காலம் முடிந்ததால் மேற்கொண்டு ஆய்வுப்பணி நடைபெறவில்லை.

கொடுமணல் அகழ்வாராய்ச்சி

தற்போது கீழடியை சுற்றியுள்ள கொந்தகை, மணலூர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஊர்களுடன் கொடுமணல் பகுதியிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடந்த 26ஆம் தேதி முதல் கொடுமணல் அருகே நொய்யல் ஆற்று பகுதியில் அகழாய்வு பணியை தொடங்கியுள்ளோம். தற்போது இரண்டு இடங்களில் 10 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்த போது 30 செ.மீ ஆழத்திலேயே பல வகையான கல்மணிகள், அதற்கான மூலப் பொருள்கள், கண்ணாடி, சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகளை வடிவமைப்பதற்கு தேவையான பொருள்கள், கால்வாய் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் சுமார் 12 செ.மீ நீளத்தில் இரும்பினால் ஆன கரண்டி போன்ற பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது. 30 செ.மீ ஆழத்திலேயே பழங்கால பொருள்கள் கிடைத்து வருவதால் மிக கவனமாக ஆய்வுப்பணியில் ஈடுபட்டுவருகிறோம். இதுவரை நடந்த ஆய்வுகளில் தொழிற்கூடங்கள், கல்லறைகள் ஆகியவை தனியாருக்கு சொந்தமான நிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போதைய அகழாய்வு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நொய்யல் ஆற்றங்கரையின் வடகரை பகுதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து நடைபெறும் ஆய்வில் பழங்கால பொருள்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் வரை இந்த அகழாய்வு பணி நடைபெறும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details