தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு; எதிர்ப்பு தெரிவித்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்! - ஈரோடு செய்திகள்

Erode Building Demolition issue: சத்தியமங்கலம் அருகே பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டது.

Building Demolition issue
வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் இடிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 1:56 PM IST

வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் இடிப்பு

ஈரோடு : அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாவீதி பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கீழ்பவானி கிளை வாய்க்கால் இருந்த பகுதியில், தற்போது 16 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அந்த வீடுகள் அனைத்தும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதியில் வழித்தடத்தை பயன்படுத்துபவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டது. முன்னதாக 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நில அளவைத்துறை மூலம் கால்வாய் இருந்த பகுதிகள் அளவீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க முயற்சித்தனர்.

அப்போது வீட்டின் உரிமையாளர்கள் கட்டடத்தை இடிக்க விடாமல் தடுத்து, வீட்டின் முன் அமர்ந்து போராட்டம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கட்டடத்தை இடிக்க விடாமல், போலீசாரின் பணியைத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக, அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டின் முன்பகுதி, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டடப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பாஜகவின் நால்வர் குழு சென்னை வருகை; ஆளுநரைச் சந்திக்க உள்ளதாக சதானந்த கவுடா தகவல்!

ABOUT THE AUTHOR

...view details