திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு - சாலையின் நடுவே பழுதாகி நின்ற லாரி
ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
இந்தப் பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில், கேரள மாநிலம் சுல்தான் பத்ரியிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்தது.
திம்பம் ஆறாவது வளைவில் லாரி திரும்பும்போது லாரியின் சக்கரங்கள் பழுதாகி சாலையின் நடுவே நின்றது. இதனால் லாரியை மேலும் நகர்த்த முடியாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகம் பயணிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை காவல் துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை சாலையோரம் நிறுத்தி சிறு வாகனங்கள் செல்லும் வகையில் உதவினர்.
அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சுமார் எட்டு மணி நேரம் லாரி பழுது நீக்கப்பட்டு அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது. அதிக பாரம் காரணமாக லாரியை நகர்த்தி பழுது பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மெக்கானிக் தெரிவித்தார்.