தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறந்த உடலை எடுத்துச் செல்லக்கூட சாலை இல்லை; மலைக் கிராமவாசிகள் வேதனை! - sathiyamangalam

ஈரோடு: மலை கிராமத்திற்கு செல்வதற்கான சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழந்தவரின் சடலத்தை 12 கி.மீ. தூரம் தொட்டிலில் கட்டி சுமந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு மல்லியம்துர்க்கம் கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

erode

By

Published : Jul 14, 2019, 12:32 PM IST

சத்தியமங்கலம் அடுத்த மல்லியம்துர்க்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவரது மனைவி செல்வி. மகன்கள் காசிபிரசாத் (10), சுபிஷ் (6). இவர்களில் காசி பிரசாத் அங்குள்ள அரசு ஊராட்சிப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நோயின் தாக்கம் குறையாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை அமைத்து தர கோரிக்கை

பின்னர், மாணவர் காசிபிரசாத்தின் உடல் சொந்த ஊரான கடம்பூர் மல்லியம்துர்க்கம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கடம்பூரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் செங்குத்தான உயரத்தில் உள்ள மல்லியம்துர்க்கம் கிராமத்துக்கு சாலை வசதியில்லாத காரணத்தால் அவசர ஊர்தி மூலம் கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.

12 கி.மீ தூரம் தொட்டிலில் கட்டி எடுத்துச் செல்லப்பட்ட சிறுவன்...

இதனால் 12 கி.மீ. தூரம் மாணவரின் உடலை தொட்டில் கட்டி சுமந்துச் சென்ற பரிதாப நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் மல்லியம்துர்க்கம் கிராமத்துக்கு போதிய சாலை வசதி ஏற்படுத்தித் தராததைக் கண்டித்து தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலும் இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை என்பது மேலும் வேதனையை அளிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details