ஈரோடு மாவட்டத்தில், பழைய பாளையத்திலுள்ள ஆவின் விற்பனை மையம், செங்கோடம்பாளையம், சம்பத் நகர், மாநகராட்சி அலுவலகம், தீயணைப்பு அலுவலகம், ரயில் நிலையம், பழைய வேலைவாய்ப்பு அலுவலகம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம், சூரம்பட்டி ஆவின் விற்பனை பாலகம் ஆகிய இடங்களில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் இன்று (ஜூன்.13) காலை 5 மணிக்கு முன்னறிவிப்பின்றி அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
ஆவின் பாலகங்களில், ஆவின் தயாரிப்பு பொருள்களைத் தவிர வேறு நிறுவனங்களின் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா? அரசு அறிவித்துள்ள விலையை விட, கூடுதல் விலைக்கு பால், பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆவின் பால், பால் பவுடர், ஆவின் நெய் உள்ளிட்ட ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருள்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக, உற்பத்தி செய்யப்பட்ட தேதி, காலாவதியான தேதிக்குள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பாலகங்களில், தனியார் நிறுவனங்களின் பால், பால் பொருள்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த அதிரடி ஆய்வை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 400 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலும், முன்னறிவிப்பின்றி இந்த அதிரடி ஆய்வை மேற்கொண்டதாகவும், மாநிலம் முழுவதும் இந்த ஆய்வு தொடரும் என்றும் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.