நவீனக் காலத்திற்கு முன்பு சிட்டுக்குருவிகள், யானை போன்ற உயிரினங்கள்தான் விதைப்பந்துகளாகச் செயல்பட்டன. பழங்களை உண்டு பின்னர் அவைகளிட்ட எச்சம்தான் காடுகளைச் செழித்தோங்கச் செய்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் வன உயிரினங்கள் இருப்பே கேள்விக்குறியாகும் நிலையில், அவை வனங்களை எப்படி உருவாக்கும். அதற்காக மனிதர்கள் தயாரிப்பதுதான் விதைப்பந்துகள். விதைப்பந்துகள் பராமரிப்பு இல்லாமலே நன்றாக வளரும்.
எப்படி?
விதைப்பந்துகளை மண், எரு போன்றவை கலந்துசெய்வதால் எலி, எறும்பு, பறவைகள் உள்ளிடவற்றால் பாதிப்பு ஏற்படாது. விதைகள் முளைப்பதற்குத் தேவையான சத்தானது, அதில் ஏற்கனவே கலக்கப்பட்ட எருவிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். இதனால் விதைகள் முளைப்பது எளிதாகும். தரிசு நிலங்களில் வீசிய விதைப்பந்து, ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும்.
ஒரு வீசும் விதைப்பந்தானது, மழை பெய்து முளைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில், தட்டையாக உருகி உள்ளிருக்கும் விதைகள் முளைப்பதற்கு துணை புரியும். உருண்டையில் உள்ள மண், வேர்கள் வலுவாக மண்ணில் நிலைக்க உதவும். காடுகளை உருவாக்குவதற்கு விதைப்பந்து முறை சரியான தீர்வாக அமையும். இதுதான் தீர்வு என்று அறிந்த பின்னர், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளைத் தயாரித்து, வனத்தை உருவாக்க முனைந்துள்ளான் சிறுவன் ஒருவன். பச்சைத் தலைகளை அசைக்கும் மரங்களின் உடலை ஆதரவாகத் தொடுவதும், அவற்றோடு பேசுவதும் மேகனுக்கு அலாதி பிரியம்.
ஈரோடு மாவட்டம் அருகேயுள்ள முள்ளாம்பரப்பு பகுதியிலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாலமுருகன், சண்முகப் பிரியா தம்பதியின் அன்பு மகன்தான், சிறுவன் மேகன். நான்காம் வகுப்பு மாணவனான மேகன் ஊரடங்கு கால விடுமுறையால் சலித்துவிடக் கூடாது என்பதற்காக பாலமுருகன் கொடுத்த டாஸ்க்தான் விதைப்பந்துகள் தயாரிப்பு.
கடந்த சில வருடங்களாகவே பாலமுருகன் விதைப்பந்துகள் தயாரிப்பதையும், அதை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து பழகிய மேகனுக்கு விதைப்பந்துகள் தயாரிப்பது எளிமைதான் எனத் தோன்றினாலும், உள்ளூரத் தயக்கம் இருந்தது.