தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்து இரண்டு மாதங்களாக நடைமுறையிலிருந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து 11ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (செப். 6) எவ்வித கட்டுப்பாடுமின்றி வியாபார நிறுவனங்கள் திறக்கப்பட்டு, வியாபாரம் சுறுசுறுப்புடன் நடைபெற்றது.
கிறிஸ்துவ மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ மத வழிபாட்டுத் தலங்கள் திருப்பாலியுடன் தொடங்கின. பொது போக்குவரத்துக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததால் வழக்கமான ஞாயிற்றுக்கிழமையாக ஈரோடு நகரம் திரும்பி இருந்தது.
கரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டு மாதங்களில் வந்த 10 ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சிறிய கடைகள் முதல் பெரிய வியாபார நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.