ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகராட்சியின் மையப்பகுதியில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடை, தடப்பள்ளி வாய்க்கால் ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழைநீர் நேரடியாக சென்று தடப்பள்ளி வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்ததால், அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் நடவு முடிந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை வெள்ள நீர் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும்; தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். வெள்ளநீர் வடிந்த பிறகே சேதமதிப்பு தெரியவரும் எனவும், சுமார் ஒரு கோடி மதிப்பிலான சாகுபடி பயிர்கள் சேதமடைந்திருக்கலாம் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு முறையும் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் கனமழை பெய்யும் போது கீரிப்பள்ளம் ஓடையிலிருந்து வெளியேறும் மழைநீர், நேரடியாக தடப்பள்ளி வாய்க்காலில் கலப்பதால் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஓடையிலிருந்து வரும் மழைநீரை மாற்றம் செய்ய வழிவகை செய்யவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:நெல் பயிர் மழையில் நனைந்தது: நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள்!