ரூ.1 கோடிப்பே..புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்! ஈரோடு:புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தைக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும் விற்கவும் வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (பிப்.24) நடந்த வாரச்சந்தையில் 30 எருமைகள், 150 கலப்பின மாடுகள், 100 கன்றுகள் 200 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள் 18 முதல் 35 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு 24 முதல் 42 ஆயிரம் ரூபாய், ஜெர்சி 22 ஆயிரம் முதல் 48 ஆயிரம், சிந்து 16 ஆயிரம் முதல் 42 ஆயிரம், நாட்டு மாடு 72 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. வளர்ப்பு கன்றுகள் 6000 முதல் 14 ஆயிரம் வரை விற்பனையானது.
அதேபோல், பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று 7000 ரூபாய் வரையும், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் 6500 ரூபாய் வரையும் விற்பனை ஆனது. இவற்றைக் கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் சென்றனர்.
கடந்த சில வாரங்களாகச் சந்தைக்குக் கால்நடைகள் வரத்து குறைவாக இருந்ததாகவும், இந்த வாரம் கறவை மாடு, கன்றுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டியதால் சந்தையில் கால்நடைகள் 1 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகவும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "தமிழ் இனி மெல்ல சாகும்" - மருத்துவர் ராமதாஸ்!