கரோனா நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு முகக்கவசம் அவசியம் என்றும், பொது இடங்களில் முகக்கவசமின்றி நடமாடக்கூடாது என்றும், வியாபார நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் முகக்கவசம் அணிந்தபடி வியாபார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அபராதம் விதித்த மாநகராட்சி ஆணையர் இதனிடையே முக்கவசமின்றி அலட்சியமாக வெளியேறுபவர்கள் மீது தொடர்ந்து காவல் துறையினர், மாநகராட்சி, நகராட்சித் துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூல் செய்து வருகின்றனர். ஆனாலும் முக்கவசமின்றியே பலரும் வாகனங்களை இயக்குவது தொடர்கிறது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி, ஈரோடு மாநகரக் காவல் துறையினர் ஒன்றிணைந்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இரண்டு சக்கர வாகனங்கள், கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், பேருந்துகள் ஆகியவற்றை நிறுத்தி, முக்கவசமின்றி இருப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய்வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. நேற்று(செப் 22) மாலை இரண்டு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அபராதமும் வசூலிக்கப்பட்டது.
முக்கவசமின்றி வாகனங்களை இயக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு பொதுமக்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தாய், மகள் தற்கொலை! ஒருவருக்கு தீவிர சிகிச்சை!