பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி குப்பைகளைத் தரம்பிரித்து அவற்றை அரைத்து உரமாக்கும் பணிகளுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈரோடு வைராபாளையத்தில் பசுமை உர குடில் அமைக்கப்பட்டது. இதில் ராட்சத அரவை இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அரைத்து உரமாக்கப்படுகின்றன.
இதற்கென்று தனியாக ஆள்கள் நியமிக்கப்படாமல் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இன்று பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த துப்புரவு ஊழியர் விஜயன், இயந்திரத்தை இயக்கியபோது அவரது வலது கை முழங்கையுடன் துண்டாகி முற்றிலும் சிதைந்தது. இவரது அலறல் சத்தம் கேட்டுவந்த சக பணியாளர்கள் உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாநகராட்சி ஊழியரின் கை துண்டான சோகம் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிதைந்துபோன கையை சேர்ப்பதற்கு வழியில்லை எனத் தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக விஜயன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பை அரைக்கும் இயந்திரத்தில் மற்ற ஊர்களுக்கு உள்ளது போல் கன்வேயர் பெல்ட் இல்லை எனக் கூறப்படுகிறது.
நேரடியாக இயந்திரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குப்பைகளைத் தள்ளும்போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர்களை குப்பை அரைக்கும் இயந்திரப் பணிகளையும் செய்யுமாறு அலுவலர்கள் நிர்பந்தம் செய்கின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்திய பணியாளர்கள் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.