ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்திடும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மாவட்டத்தில் நோய் பாதிப்புக்குண்டான அறிகுறிகளுடன் நோயாளிகள் கண்டறியப்படவில்லை என்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஞானக்கண் பிரேம்நவாஸ் தெரிவித்துள்ளார்.
சீன நாட்டில் வெகு வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் இந்த நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த நோய் பாதிப்புக்குண்டான நோயாளிகள் சிலர் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் உடனடியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்க்கான சிறப்பு வார்டுகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் தயார் நிலையில் சிறப்பு வார்டுகள் இருந்திடவும் நோய் பாதிப்புக்குள்ளானவர் வரப் பெற்றால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஞானக்கண் பிரேம்நவாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சிறப்பு வார்டுகள் மேலும், மாவட்ட அளவில் இதுவரை கரோனா வைரஸ் நோய் பாதிப்புக்குள்ளான அறிகுறிகள் இதுவரை இல்லை என்றும், அவ்வாறு நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சையை வழங்கிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே கரோனா நோய் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ள சிறு குழந்தைகள், பெரியவர்கள் அதிக கூட்டம் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும், நோய் பாதிப்பு என்பது தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு காய்ச்சல், சளி, வாந்திபேதி, அறிகுறிகளுடன் இருக்கும்.
செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர்கள் நோய் பாதிப்புள்ளவர்களுக்கு உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால் அறிகுறியுள்ள நோயாளிகள் உடனடியாக பரிசோதனையுடன் உரிய சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை சிறப்பு நிபுணர் மருத்துவர் பிரியா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் : தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்புச் சிகிச்சைகளுக்கு ஏற்பாடு