தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு: அமைதியாக 2,000 ரூபாயை வாங்கிச் சென்ற மக்கள் - MK STALIN

இன்று (மே.16) முழு ஊரடங்கிலும், ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, இரண்டாயிரம் ரூபாய் கரோனா நிவாரணத் தொகையை வாங்கிச் சென்றனர்.

CORONA RELIEF FUND, கரோனா நிவாரணநிதி வழங்கல், ஈரோடு, ERODE
CORONA RELIEF FUND

By

Published : May 16, 2021, 8:11 PM IST

Updated : May 17, 2021, 6:11 AM IST

ஈரோடு: திமுக தனது தேர்தல் அறிக்கையில், அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இத்திட்டம், ஜூன் 3ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் இம்மாத இறுதிக்குள் முதல் தவணைத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசாணையை வெளியிட்டார்.

இதற்கிடையில், கடந்த 10ஆம் தேதி முதல் 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் உதவிடும் வகையில், உடனடியாக, கரோனா முதற்கட்ட நிவாரணத் தொகை இரண்டாயிரம் ரூபாயை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,152 ரேஷன் கடைகளில், ஏழு லட்சத்து 13 ஆயிரத்து 910 ரேஷன் கார்டுகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளில் சென்று டோக்கன் விநியோகித்தனர். அந்த டோக்கனில் நிவாரணத் தொகை வாங்க வரவேண்டிய நாள், நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்று (மே.15) முதல், மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முதற்கட்ட நிவாரணத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனுடன் நீண்ட வரிசையில் நின்று தொகையை வாங்கி சென்றனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்றும் (மே.16) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும், ரேஷன் கடைகள், இன்று மட்டும் காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று 2,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இன்று டோக்கன் கொடுத்து பணம் வாங்க வேண்டியவர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். சமூக இடைவெளி கடைபிடித்து, வட்டங்களுக்குள் நின்று மக்கள் தொகையை வாங்கிச் சென்றனர்.

ரேஷன் கடையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வரிசையில் நிற்கும் மக்கள்

இந்தப் பணி இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தனிமைக் காலம் முடிந்தவுடன் அந்தந்த பகுதிக்குள்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்று நிவாரணத் தொகையை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் வந்து ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகையை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், கரோனா நிவாரணமாக வழங்கப்பட்டு வரும் இரண்டாயிரம் ரூபாய், இந்தப் பேரிடர் காலத்தில் வேலையிழந்துள்ள சூழலில் மிகுந்த பயன் அளிப்பதாகவும், இதனை வரவேற்பதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கின் மத்தியில் சுட்டிக் குழந்தைகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது எப்படி?

Last Updated : May 17, 2021, 6:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details