ஈரோடு மாவட்டத்தில் கடந்த 37 நாள்களுக்குப் பிறகு சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடிக்கு வந்தவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு, சேலம் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில் கடந்த 41 நாள்களுக்குப் பிறகு மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் தனது மகனுடன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வழியாக கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நேற்றிரவு இறங்கியுள்ளார்.
அங்கு அவருக்கும் அவரது மகனுக்கும் மருத்துவக் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்து அவர்கள் ஓய்விலிருந்தபோது, கோயம்புத்தூரில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இது குறித்து ஈரோடு மாவட்ட மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின், கொடுமுடிக்கு மருத்துவக் குழுவினர் விரைந்தனர். நோய்த்தொற்று பாதிப்புடையவரை மீட்டு உடனடியாகப் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
மேலும் பாதுகாப்பு கருதி அவருடைய மகனையும் உடன் அழைத்துச் சென்று பெருந்துறை கரோனா தனிச்சிறப்பு வார்டில் அனுமதித்துள்ளனர். அங்கு இருவருக்கும் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டுவருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளூரில் கடந்த 41 நாள்களாக எவ்வித கரோனா நோய்த்தொற்றும் கண்டறியப்படாத நிலையில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவது ஈரோடு மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கரோனாவுக்குலாம் பிரயாணி காத்திருக்காது... விருந்து நடத்திய இளைஞர்கள்!