கரோனா நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்திடும் வகையில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களையும், மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக்களையும் நியமித்துள்ளது.
இந்தக் கண்காணிப்புக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் ஆய்வுமேற்கொண்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதுடன், பணிகளைச் செய்வதற்குரிய ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கரோனா நோய்த்தடுப்பு கண்காணிப்புக் குழு இணை இயக்குநர் தனலட்சுமி ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது வீதி வீதியாகவும், தெருக்கள் வாரியாகவும் கிருமிநாசினி தெளிப்பது பிரதான சாலைப் பகுதிகளில் பவுடர் கிருமிநாசினிகளைக் கொட்டிவைப்பது போன்ற பணிகளை ஆய்வுமேற்கொண்ட இணை இயக்குநர், மாநகராட்சியினர் கிருமிநாசினி தெளிப்பிற்கு பயன்படுத்தும் வாகனங்கள், நோய்த்தடுப்புப் பணிக்குப் பயன்படுத்தும் துப்புரவுப் பணியாளர்கள் எண்ணிக்கை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் ஆகியவற்றை கேட்டறிந்தனர்.
ஈரோடு கரோனா சிறப்பு கண்காணிப்பு குழு இணை இயக்குநர் ஆய்வு! மேலும் நோய்த்தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் அனைத்து களப்பணியாளர்களும் நோய்ப் பாதிப்புக்குள்ளாகாமல் தடுப்பதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கையாகக் கையுறை, முகக்கவசங்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், பணியின்போது கைகளைச் சுத்தம் செய்வதற்கான சானிடைசர், நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட கபசுரக் குடிநீர், விட்டமின் சத்து மாத்திரைகளையும் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் பார்க்க:'கும்மியாட்டம் ஆடிய இளைஞர்கள்...' - கரோனா விழிப்புணர்வில் சூலூர் காவல் துறை!