ஈரோடு:தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இது 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கடந்த நான்கு நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக நீர்வரத்து இன்று 6ஆயிரத்து 774 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த மூன்று நாள்களில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 85.20 அடியாகவும், நீர் இருப்பு 18.6 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 105 அடி உயரம் உள்ள அணையில் தற்போது நீர்மட்டம் 85 அடியாக உள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது.
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; வேகமாக உயரும் அணை நீர்மட்டம் வழக்கமாக பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கனமழை காரணமாக அணை வேகமாக நிரம்பி வருவதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மெரினாவை கண்காணிக்கிறது ட்ரோன்