ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரில் இருந்து 21 கி.மீ., தூரத்தில் உள்ள மாக்கம்பாளையம் கிராமத்துக்குச் செல்ல வேண்டுமெனில் குரும்பூர் மற்றும் சர்க்கரைப்பள்ளம் ஆகிய இரு காட்டாறுகளைக் கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் இரு காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப்போக்குவரத்து மற்றும் அரசுப் பேருந்து சேவை பாதிக்கப்படுகிறது.
காட்டாற்று வெள்ளத்தைத் தாண்டி செல்லமுடியாத நிலையில் மாக்கம்பாளையம், குரும்பூர், கோம்பைத்தொட்டி, அருகியம் மக்கள் அங்கு விளையும் காய்கறிகளை வெளிச்சந்தைக்கு கொண்டு விற்கமுடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.7 கோடி செலவில் குரும்பூர் மற்றும் சர்க்கரைப்பள்ளத்தில் இரண்டு உயர்மட்ட பாலம் கட்டுவதற்கானப் பணி தொடங்குகிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப்பகுதியில் கட்டுமானப்பணி நிறைவடையும் வரை மாற்றுப்பாதை அமைப்பதற்கும் ஜல்லி, சிமெண்ட மற்றும் கட்டுமானப்பொருள்கள் பயன்படுத்துவதற்கும் வனத்துறை சார்பில் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடம்பூர் மாக்கம்பாளையம் இடையே உயர்மட்ட பாலம் இதையடுத்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கேசிபி இளங்கோ, சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் கிருபா சங்கர் ஆகியோர் பாலம் அமைக்கப்படும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு கட்டுமானப்பணிக்கு அனுமதியளித்தனர். இப்பகுதி மக்களின் கனவான மாக்கம்பாளையம் உயர்மட்டப் பாலம் 200 ஆண்டுகளுக்குப் பின் நனவானது.
இதையும் படிங்க:கொசஸ்தலை ஆற்றில் திருவள்ளூர் எம்எல்ஏ ஆய்வு!