ஈரோடு:கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி முக்கிய பங்காற்றிவருகிறது.
தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ள ஈரோடு மாவட்டத்தில், ஆட்சியரின் உத்தரவின்படி, கடந்த 3 நாள்களாக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி டோக்கன்
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் உள்ளது, கேவிகே அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில், நேற்று (ஜூன்.26) தடுப்பூசி போட டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கின.
ஒருநாளில் 150 பேருக்கு தடுப்பூசி டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி முகாமில் குவிந்தனர்.
இதனிடையே, புஞ்சை புளியம்பட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என வரிசையில் நின்றனர்.
வாக்குவாதம்
இதனால் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த வட்டார சுகாதார அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசிப் போடும் பணிகள் நடைபெறுவதாகக் கூறினர்.
தூய்மைப் பணியாளர்கள் வாக்குவாதம் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை
இதையடுத்து, தூய்மைப் பணியாளர்களை வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வட்டார சுகாதார அலுவலர் வெங்கடாசலம் அறிவுறுத்தியுள்ளார். இதை ஏற்காத தூய்மைப் பணியாளர்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
நகராட்சி அலுவலகம் முற்றுகை
தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர், அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 'போதிய விலை கிடைக்கவில்லை...' - மலர் விவசாயிகள் வேதனை