ஈரோடு:உணவகத்தை நள்ளிரவில் சேதப்படுத்தியதாக, திமுக இளைஞரணி ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் உணவக உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சுப்புராமன் என்பவர் பல ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கும், பெருந்துறை திமுக இளைஞரணி ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியத்துக்கும் முன்விரோதம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலசுப்பிரமணியம், அரசு அனுமதி இல்லாத மதுபான பாரை சுப்புராமன் உணவகம் அருகே நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, உணவகத்தை நடத்த விடாமல் கடந்த பல ஆண்டுகளாக பாலசுப்பிரமணியம் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
உடைக்கப்பட்ட கடை பகுதிகளை காண்பிக்கும் உரிமையாளர் ஏற்கனவே, கடந்த 2017ஆம் நள்ளிரவில் உணவகத்தின் முன்பு நிறுத்தியுள்ள காரை சேதப்படுத்தியது மட்டுமின்றி உணவகத்தின் பின் பகுதியில் கழிவு நீர் குழாய்களையும் ஜேசிபி வாகனம் கொண்டு சேதப்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக சுப்புராமன் உணவகத்தின் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை கொண்டு பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்தும் திமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் வழக்குரைஞர் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து உணவகத்தின் உரிமையாளர் சுப்புராமன் உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடியதை அடுத்து, நீதிமன்றம் மூலமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக ஒன்றிய செயலாளரும் வழக்குரைஞருமான பாலசுப்பிரமணியம் மீண்டும் உணவகத்தில் உள்ள கண்ணாடிகளை அடித்து உடைத்தது மட்டுமின்றி, நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய உதவியாக இருந்த உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமிரா, காட்சிகள் பதிவாகும் ஹாட் டிஸ்கையும் எடுத்து சென்று விட்டதாகவும், உணவகத்தின் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தான் தொடர்ந்து உணவகம் நடத்த வேண்டும் என்றும், அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் திமுகவைச் சேர்ந்த பெருந்துறை ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். காவல்துறையினரிடம் உணவகத்தின் உரிமையாளர் சுப்புராமன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: செங்குன்றத்தில் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இருவர் கைது